திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி ராம. ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். ஆனால், அறநிலையத் துறையும் தமிழக அரசும் அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. இதனால், மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
விசாரணையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிஐஎஸ்எஃப் பாதுகாப்போடு மனுதாரர் மலை உச்சியில் தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
"நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால்தான், சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். காவல்துறை தனது கடமையை செய்யத் தவறியதாலேயே சிஐஎஸ்எஃப் உள்ளே கொண்டுவரப்பட்டது. இதில் விதிமீறல் இல்லை.
மாநில அரசு தனது கடமையை செய்ய தவறியதால்தான் தனி நீதிபதி மீண்டும் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு ஏதோ உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளது" என்று நீதிபதிகள் கடுமையாக கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இந்த தீர்ப்பையும் எதிர்த்து மேல்முறையீடு செய்ய தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.