கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் திரும்ப ஒப்படைக்க முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.  
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வரும் நிலையில், இது ஒரு நிரந்தர பிரச்சனையாகவே நீடித்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வைக் காணும் பொருட்டு, இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா மீண்டும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்று வருகிறது.
	 
	இந்த நிலையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் கூறியபோது "கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்காக இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்றனர். அவர்கள் மீன் வளங்களை அதிக அளவில் சுரண்டுவதோடு, கடல் தாவரங்களுக்கும் பெரும் சேதத்தை விளைவிக்கின்றனர். இந்திய மீனவர்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதற்கு இந்திய அரசும் ஆதரவளிக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம்," என்று அவர் தெரிவித்தார்.
	 
	மேலும் அவர், "இந்தப் பிரச்சனைக்குத் தூதரக ரீதியில் தீர்வு காண இலங்கை தயாராக உள்ளது. ஆனால், சர்வதேச சட்டங்களின்படி நிறுவப்பட்டதும், இலங்கையின் ஒருங்கிணைந்த பகுதியுமான கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது. இந்தியாவில் அரசியல் கட்சிகள், வெறும் அரசியல் ஆதாயங்களுக்காகவே கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் மீண்டும் எழுப்புகின்றன" என்று கூறினார்.