இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி ஒரு முடிவை கொண்டு வரவேண்டும் என மீனவர்கள் பல காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக மீனவர்களை கைது செய்வது குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் “இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பின்பற்றுவதால் கடல்வளம் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது, சமீபமாக இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
எல்லைதாண்டி மீன் பிடித்தால் கைது மற்றும் படகு பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும். இந்த பிரச்சினையை தூதரகம் மூலமாக இந்தியாவிடம் கொண்டு செல்வோம். சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்களை கைது செய்ய இலங்கை கடற்படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K