உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா, இதுவரை இல்லாத மிகப்பரந்த வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்ததாக உக்ரைனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரஷ்யாவின் இந்த உக்கிரமான தாக்குதலின் முக்கிய இலக்காக கீவ் நகரம் இருந்தது. 8 மணி நேரத்திற்கும் மேலாக இந்தத் தாக்குதல் நீடித்தது. கீவ் நகர ராணுவ நிர்வாக தலைவர் டைமர் ட்காசென்கோ, நகரத்தின் சியாடோஷின்ஸ்கி பகுதியில் இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில் ரயில்வே உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. பள்ளிகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. கீவ் நகரிலுள்ள போலந்து நாட்டின் தூதரகமும் சேதமடைந்ததாக அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ராடோஸ்லா சிகோர்ஸ்கி கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் உக்ரைனின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பதிலடியாக நடத்தப்பட்டதாகவும், ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா நடத்தியுள்ள இந்த புதிய தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது, ரஷ்யாவின் "மிகவும் கொடூரமான தாக்குதல்களில் ஒன்று" என்று அவர் விமர்சித்தார்.