கொலையாளி கொளஞ்சிக்கும், கொலை செய்யப்பட்ட லட்சுமிக்கும் இரண்டாவது திருமணம். கொளஞ்சிக்கு ஏற்கனவே கலியம்மாள் என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் இருந்த நிலையில், கொளஞ்சியின் தவறான நடவடிக்கையால் கலியம்மாள் அவரை பிரிந்து சென்றார். அப்போது நடந்த குடும்பப் பிரச்சினையில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன. மீதமுள்ள மூன்று குழந்தைகளுடன் கலியம்மாள் வேறு ஊருக்கு சென்றுவிட்டார்.
அதன் பிறகு, கொளஞ்சி தன்னைவிட 20 வயது குறைந்த லட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
கூலி தொழிலாளியான கொளஞ்சி பெரும்பாலும் வெளியூரில் வேலைக்கு சென்றுவிடுவார். அப்போது, ஊரார் சிலர் அவரது மனைவி லட்சுமியின் நடவடிக்கை சரியில்லை என்று கூறியுள்ளனர். இது குறித்து மனைவியிடம் நேரடியாக கேட்டபோது, லட்சுமி அதை மறுத்துள்ளார்.
சம்பவ தினத்தன்று, கொளஞ்சி வெளியூர் செல்வது போல நடித்தார். வீட்டை விட்டு வெளியேறி, அருகிலேயே மறைந்து நின்று மனைவியின் செயல்களை கவனித்துள்ளார். அவர் சென்றதை உறுதி செய்துகொண்ட லட்சுமி, கள்ளக்காதலன் தங்கராசுவுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். தங்கராசு வீட்டுக்கு வந்ததும், மூன்று குழந்தைகள் கீழே உறங்கிக் கொண்டிருந்ததால், இருவரும் மாடிக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதை மறைந்திருந்து பார்த்த கொளஞ்சி, ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றார். அங்கு, தங்கராசு தப்பிச் செல்ல முயன்றபோது, அவரை சரமாரியாக வெட்டினார். தடுக்க வந்த லட்சுமியையும் வெட்டிக் கொன்றார். இருவரும் உயிரிழந்ததை உறுதி செய்தபின், கொடூரமான முறையில் இருவரின் தலைகளையும் துண்டித்துள்ளார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் உடனடியாக விரைந்து கொளஞ்சியை கைது செய்தனர்.