வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று வங்கக் கடலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியதன் காரணமாக, இன்று காலை 8:30 மணியளவில், தென் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் தென் ஒடிசா மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை, கடலூர், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.