மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில், 38 வயதான கோவிந்த் ஜகந்நாத் பார்கே என்ற தொழிலதிபர் தனது காருக்குள் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் முதலில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது லாவணி நடனக்கலைஞர் பூஜா தேவிதாஸ் காய்க்வாட் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சோலாப்பூர் மாவட்டம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான தொழிலதிபரான கோவிந்த் பார்கேவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், பர்கான் கலா கேந்திராவில் லாவணி நடன கலைஞராகப் பணியாற்றிய பூஜா தேவிதாஸ் காய்க்வாட் என்பவருடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
பார்கே, பூஜாவுக்கு சுமார் ₹2.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் ஒரு மொபைல் போனையும் பரிசளித்துள்ளார். சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளன. கோவிந்த் பார்கே தனது மரணத்திற்கு முந்தைய இரவு பூஜாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது பூஜா மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்காவிட்டால் பாலியல் பலாத்கார புகார் கொடுப்பேன் என்று கூறியதாகவும் தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பார்கே தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது, இதனையடுத்து பூஜா காய்க்வாட் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.