திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கும் இடையே உரசல் எழுந்திருக்கிறது. CISF வீரர்களுடன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என நேற்று மதியம் சுவாமிநாதன் தீர்ப்பளிக்க வழக்கு தொடர்ந்த மனுதாரரும், இந்து முன்னணி இயக்கத்தை சேர்ந்த பலரும் அங்கு சென்றார்கள். ஆனால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக சொல்லி போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை.
ஒரு பக்கம் ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு என்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். இது தமிழக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அந்த வழக்கில் மீண்டும் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கடும் உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
மனுதாரர் CISF பாதுகாப்புடன் மலைக்கு செல்ல முயன்ற போது அவரை காவல் ஆணையர் தடுத்திருக்கிறார். 144 உத்தரவு அமலில் இருப்பதாக சொல்லி மேலே செல்ல முடியாது என காவல் ஆணையர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என கூறி இருக்கிறார். அதனால் அந்த கோவிலில் தீபம் ஏற்ற முடியவில்லை.
மாவட்ட ஆட்சியர், நீதிமன்றத்தை விடவும் தன்னை பெரியவர் என காவல் ஆணையர் எண்ணியிருக்கிறார். மதுரை காவல் ஆணையர் போதுமான பாதுகாப்பு வழங்கியிருந்தால் பிரச்சனை பெரிதாகி இருக்காது. திருப்பரங்குன்றம் தீபத்தூணியில் இன்றே தீபம் ஏற்றப்பட வேண்டும். காவல் துறை ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும்.
தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து நாளை எனக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உத்தரவை நிறைவேற்ற தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என அவர் எச்சரித்திருக்கிறார். எனவே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று இரவுக்குள் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.