சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவு அப்பட்டமான அதிகார மீறல் என்றும், அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். அமைதி நிலவிய நிலையில், வன்முறையை தூண்டும் நோக்கில் வேறு இடத்தில் தீபம் ஏற்ற சொல்லி உத்தரவிட்டதுடன், உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர்களை போராட்டக்காரர்களுக்குத் துணையாக அனுப்பியது சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைத்தது என்று அவர் சாடியுள்ளார்.
மேலும், தொடர்ந்து பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக செயல்படும் நீதிபதி மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கலவரம் ஏற்படாமல் தடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மத நல்லிணக்கத்தை காத்த திருப்பரங்குன்றம் பொதுமக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.