கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையில், ஐ.பி.எஸ். அதிகாரிகளான சோனல் மிஸ்ரா மற்றும் சுமித் சரண் ஆகியோரின் மேற்பார்வையில் ஒரு குழுவை அமைத்தது.
கடந்த ஒரு மாதமாக சி.பி.ஐ. குழுவினர் கரூரில் விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையிலான மேற்பார்வை குழுவினர் கரூர் வந்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், இன்று புதன்கிழமை அவர்கள் கூட்ட நெரிசல் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பிரசாரத்துக்கு அனுமதி கோரப்பட்ட உழவர் சந்தை, லைட் ஹவுஸ் கார்னர் உள்ளிட்ட முக்கிய இடங்களையும் பார்வையிட்டு சம்பவங்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.