தி.மு.க.வுக்குச் சோதனை வந்த நேரத்தில், அக்கட்சி அலுவலகத்தை காப்பாற்றியது ஜெயலலிதா தான் என்பதை தி.மு.க.வினர் மறந்துவிடக் கூடாது என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்திற்காக நீலகிரி மாவட்டம், குன்னூருக்கு வருகை தந்திருந்த எடப்பாடி பழனிசாமி, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 52 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் 7 மாதங்களே உள்ளன. குன்னூருக்கு இந்த ஆட்சியில் ஏதேனும் பெரிய திட்டம் வந்திருக்கிறதா? விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. வேலைவாய்ப்பு குறைந்து, செலவு அதிகரித்துவிட்டது.
நீலகிரிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீசன் காலங்களில் தான் இவர்களது வாழ்வாதாரம் இருக்கும். தி.மு.க. அரசு நீதிமன்றத்தில் சரியாக வாதாடாததால், 6,000 வாகனங்களுக்கு மேல் வர முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.”
தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை பெருகிவிட்டது. போதைப்பொருள் இல்லாத இடமே இல்லை. இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது.”
தி.மு.க. கட்சி இரண்டாக பிரிந்து, அண்ணா அறிவாலயத்தை ஒரு பிரிவு கைப்பற்ற முயன்றபோது, அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தான் அதை தடுத்து நிறுத்தி, தி.மு.க. அலுவலகத்தை காப்பாற்றினார் என்பதை தி.மு.க.வினர் மறந்துவிடக் கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி நினைவுபடுத்தினார்.