பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, நவம்பர் 18-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.
சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசிய ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அளித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி நான்கரை ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, ஜாக்டோ-ஜியோ மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது:
அக்டோபர் 16: 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வட்டார அலுவலகங்கள் முன் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.
அக்டோபர் 27 முதல் 31 வரை: அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பிரசாரம்.
நவம்பர் 18: 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம்.
இந்த அடையாளப் போராட்டத்திற்கு பிறகும் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை விடுத்துள்ளது.