லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா? அதுதான் என்னுடைய கேள்வி என இயக்குனர் அமீர் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
காவல்துறை முழுக்க முழுக்க மக்கள் பக்கம் இல்லை. அது அதிகாரத்தின் பக்கம்தான் நிற்கும், செல்வந்தர்கள் பக்கம்தான் நிற்கும். அப்படிதான் அது நின்று வந்திருக்கிறது. இதுதான் அதன் வரலாறு. எங்கேயாவது ஒன்றிரண்டு சூழல்களில் அவர்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டோ அல்லது பயந்தோ மக்கள் பக்கம் நிற்கலாம். ஆனால் பொதுவாக, காவலர்கள் யாருக்குக் கட்டுப்படுவார்கள் என்றால், தனக்கு மேல் இருக்கும் அதிகாரிகளுக்குத்தான். அந்த அதிகாரி தனக்கு மேல் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு கட்டுப்படுவார். இதுதான் காவல்துறையின் கட்டமைப்பு. இதில் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்வதற்கில்லை" என்று விளக்கினார்.
மேலும் அவர், "இந்தச் சிறப்புப் படை உள்ளே வந்து நுழைந்து அடிக்கிறார்கள் என்றால் வெறுமனே அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு யாரோ அறிவுறுத்தியிருக்கிறார்கள். அவர் யார்? விவசாயப் போராட்டம் நடைபெறுகிறது என்றால், அதில் தடியடி நடக்கும். அந்தத் தடியடியை நடத்துகிறவர் யாராக இருப்பார் என்றால், ஒரு விவசாயியின் மகனாக இருப்பான். அவர் கிராமத்தில் இருந்து போலீஸ் வேலைக்கு வந்தவராக இருப்பார். எனது அதிகாரி சொன்னார் அதனால்தான் நான் அடித்தேன் என்பார். ஆனால், ஒரு அதிகாரி சொன்னாலும் அடித்தால் நம்முடைய வேலை பறிபோகும் என்பதை, இந்த திருப்புவனம் சம்பவம் காவலர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.
இந்த ஆட்சியில், அந்த ஆட்சியில் என்று இல்லை. எல்லா ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. எந்த ஆட்சி வந்தாலும் இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும். உலகம் முழுவதும் இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா? அதுதான் என்னுடைய கேள்வி" என்று இயக்குநர் அமீர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.