அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், இந்த பயணத்தின் தொடக்க விழாவில் தமிழக பாஜக தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகின்றன.
ஏற்கனவே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் "ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 7 முதல் 21 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
இந்தப் சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள, பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கும், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டவர்களுக்கும் அ.தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் மட்டும் பாஜக தலைவர்கள் கலந்துகொள்வார்களா அல்லது சுற்றுப்பயணம் முழுவதும் பங்கேற்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தமிழக அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.