சிவகங்கையில் அஜித் குமார் காவல் விசாரணை யின்போது அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை போலீஸ் அதிகாரிகள் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அந்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் மாறி மாறி அடித்ததாகவும், காலால் எட்டி உதைத்ததாகவும், லத்தியால் தாக்கியதாகவும் உள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சம்பந்தப்பட்ட போலீசார் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், தேனி மாவட்ட எஸ்.பி., ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய போலீசாரை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
அந்த ஆட்டோ ஓட்டுநரை எதற்காக விசாரணைக்கு அழைத்து வந்தார்கள், அவர் மீதான குற்றச்சாட்டு என்ன, அவரை கொடூரமாகத் தாக்கியதற்கான காரணம் என்ன என்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தாக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.