சிவகங்கை இளைஞர் அஜித் குமாரின் 'லாக்-அப் டெத்' குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "காவல் நிலைய மரணங்கள் என்பது எல்லா ஆட்சியிலும் நடக்கின்றன" என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "காவல் நிலைய மரணங்கள் என்பது எல்லா மாநிலங்களிலும், யார் முதல்வராக இருந்தாலும், எந்த ஆட்சியாக இருந்தாலும் நடக்கக்கூடிய ஒன்றுதான். நானும் காவல் நிலைய விசாரணையை எதிர்கொண்டவன் தான்; போலீசாரின் விசாரணை போக்கு எனக்குத் தெரியும். 'அடித்தால்தான் உண்மையை வரவழைக்க முடியும்' எனப் போலீசார் நினைக்கிறார்கள். அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம்" என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர், "தி.மு.க. ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி என்று இல்லை; எல்லா காலத்திலும் போலீசாரின் விசாரணை இப்படித்தான் இருக்கிறது. முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பது ஆறுதலைத் தருகிறது.
காவல்துறையினர் ரவுடிகளை போல் நடந்து கொள்வதாக ஒருமுறை உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டுள்ளது. புலன் விசாரணையை எவ்வாறு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 11 கட்டளைகளை வகுத்துள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை எந்த காவல் நிலையத்திலும் பின்பற்றுவது இல்லை. அஜித் குமார் போன்ற மரணங்கள் அத்துமீறல் மட்டுமல்ல; இது அரச பயங்கரவாதம். அவருடைய குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று திருமாவளவன் திட்டவட்டமாகக் கூறினார்.