நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கிய போதே திமுகவை தோற்கடிக்க வேண்டுமெனில் அவர் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என பலரும் பேசினார்கள்.
அதற்கேற்றார் போலவே விஜய் எந்த மேடையில் பேசினாலும் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். எந்த இடத்திலும் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்கிற பெயர்களை கூட உச்சரிக்கவில்லை.
ஒரே ஒரு முறை மட்டும் ஜெயலலிதா மேடம் யாரை கடுமையா எதிர்த்தார்களோ அவர்களிடம் உங்கள் கட்சியை அடமானம் வைத்து விட்டீர்கள் என மறைமுகமாக அதிமுகவை சீண்டினார். அதோடு சரி.
மற்றபடி திமுகவை மட்டுமே அவர் தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.
அதேநேரம் கரூர் சம்பத்தில் விஜய்க்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமியும், பாஜகவும் குரல் கொடுத்தனர். மக்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காத தமிழக அரசுதான் அதற்கு முக்கிய காரணம் என அதிமுகவும், பாஜகவும் பேசியது. இதையடுத்து தங்களின் கூட்டணிக்குள் விஜய் கொண்டு வர அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிந்தது. ஆனால் அவர்களுக்கு நன்றி கூட விஜய் தெரிவிக்கவில்லை.
ஒருபக்கம் விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவதுதான் அவரின் கட்சிக்கும், அரசியல் எதிர்காலத்திற்கும் நல்லது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் பேசினார்கள். மேலும், அதிமுக வெற்றி பெற்றால் விஜய்க்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாகவும் பேசப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதேநேரம் அதில் விஜய்க்கு விருப்பமில்லை எனவும் சொல்லப்பட்டது.
சமீபத்தில் நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தலைமையில்தான் கூட்டணி, விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தார்கள். இதன் மூலம் விஜய் அதிமுக கூட்டணிக்கு போக விரும்பவில்லை என்பது தெரிந்தது
. இந்நிலையில் இன்று செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என உள்துறை அமைச்சர் அமித்ஷாவே அறிவித்து விட்டார். முதல்வர் வேட்பாளரும் அதிமுகவை சேர்ந்தவர்தான் என்பதை ஏற்கனவே அமித்ஷா உறுதி செய்து விட்டார் என பேசி இருக்கிறார்.
எனவே விஜய் அதிமுக கூட்டணிக்கு வர விரும்பினால் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக விஜய் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக சொல்லி இருக்கிறார் என்கிறார்கள்.