சின்னக்காமன்பட்டியில் சமீபத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியான நிலையில், அரசு அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமாக 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த பட்டாசு ஆலைகள் முறையான பாதுகாப்பு வசதிகளுடன் இருப்பதாக வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை, மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அவ்வாறான விதிமுறைகள் பின்பற்றப்படாததே சின்னக்காமன்பட்டி ஆலை விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறாக நடத்தப்படும் சோதனையில் பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை மீறியிருந்தால் உடனடியாக ஆலைகளுக்கு சீல் வைக்கப்படும்.
இதனால் இந்த அறிவிப்பு வெளியானதுமே விருதுநகரில் உள்ள சுமார் 200க்கும் அதிகமான பட்டாசு ஆலை உரிமையாளர்கள், உரிமம் ரத்தாகிவிடுமோ என பயந்து ஆலைகளை மூடி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K