திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் மற்றும் போளூர் தொகுதிகளில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டங்களில், பொதுமக்கள் மத்தியில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசு தனது கூட்டங்களில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்வதாகக் குற்றம் சாட்டினார்.
நான் தொடர்ந்து பல கூட்டங்களில் இதனைப் பார்த்து வருகிறேன். நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை வேண்டுமென்றே அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசு செய்கிறது. தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எங்களை எதிர்க்க வேண்டும். இதுகுறித்து நாளை காவல்துறையிடம் புகார் அளிப்போம்” என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.
தி.மு.க. தேர்தல் வரும்போது அழகாக பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடும் என்று கூறிய ஈபிஎஸ், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், தூய்மை பணியாளர்களுக்கு வாக்குறுதி என பலவற்றைக் கைவிட்டதாக அவர் சாடினார். மேலும், தி.மு.க. ஆட்சியில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், 2026ஆம் ஆண்டுத் தேர்தல் இந்த சீரழிவுக்கு ஒரு முடிவுகட்டும் என்றும் தெரிவித்தார்.