Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எப்படி தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? - தேர்தல் ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

Advertiesment
MK Stalin

Prasanth K

, திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (14:00 IST)

கடந்த சில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சில மாநிலங்களில் தேர்தல் ஆணையம் தகுதியான வாக்காளர்களை நீக்கியதாகவும், போலி வாக்காளர்களை சேர்த்ததாகவும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதை தொடர்ந்து எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை விமர்சிக்க தொடங்கிய நிலையில் சமீபத்தில் பீகாரில் நடந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் ராகுல்காந்தி ஆதரமில்லாமல் தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டுவது இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும் என தலைமை தேர்தல் ஆணையர் பேசியிருந்தார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல கேள்விகளை எழுப்பி பதிவிட்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் அவர் “இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு.

 

பின்வரும் கேள்விகள் எழுகின்றன:

 

1.வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?

 

2.புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?

 

3.Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு  நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?

 

4.பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?

 

5.01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?

 

6.வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?

 

7.“நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?” என அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் ஐ பெரியசாமியின் சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!