தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, மதுரை, திண்டுக்கல் என அவருக்குத் தொடர்புடைய பல இடங்களில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் இல்லம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதி, திண்டுக்கல் மாவட்டம் துரைராஜ் நகரில் உள்ள அவரது வீடு, மற்றும் திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூரில் உள்ள பழனி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலாளருமான இ.பெ. செந்தில்குமாரின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக சோதனைகளை நடத்துவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனை, வரும் நாட்களில் தமிழக அரசியலில் மேலும் பல விவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.