Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உதவி கேட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய காவல்துறை! - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

Advertiesment
EPS

Prasanth K

, புதன், 5 நவம்பர் 2025 (11:02 IST)

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அவசர உதவிக்கு காவல்துறையை மாணவி அழைத்தும், அங்கு சென்று மாணவியை காவல்துறை கண்டுபிடிக்காததை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

 

கோவை விமான நிலையம் பின்புறத்தில் காரில் நண்பரோடு பேசிக் கொண்டிருந்த மாணவியை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை மூன்று பேரையும் கைது செய்துள்ளது. 

 

இந்நிலையில் சம்பவம் நடந்தபோது காவல்துறை சரியாக செயல்படாமல் இருந்ததாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பல கேள்விகளை முன்னிறுத்தி பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி “கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி விளக்கம் அளித்த கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர், ஞாயிற்றுக் கிழமை இரவு 11:20 மணிக்கு காவல்துறைக்கு மாணவியின் நண்பர் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான் மாணவியைக் கண்டதாகவும், அதுவும் அம்மாணவி தானாக வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.

 

இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது காவல்துறை? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

 

குற்றவாளிகளை பிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது காவல்துறையால் சம்பவ இடத்தில் நின்றுக்கொண்டே நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். 

 

100 போலீசார் இணைந்து பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக காவல் ஆணையர் சொல்கிறார். நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

 

"காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு மாணவி எப்படி சென்றார்?" என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, "சிறிய சுவர் ஒன்று இருந்தது; அதை தாண்டிச் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற காவல் ஆணையர், சில நிமிடங்களில், "மிகப்பெரிய சுவர் இருந்தது; அதை தாண்டிச் சென்று அந்த மாணவி இருந்தார் " என தனது கருத்தை மாற்றினார்.

 

அங்கு இருந்தது சிறிய சுவரா? பெரிய சுவரா? ஏன் அதைத் தாண்டி காவல்துறை, அதுவும் 100 பேர் கொண்ட படை, சென்று தேடவில்லை?

 

"இருள் சூழ்ந்த தனிமையான இடம் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் காவல்துறை கூச்சப்பட வேண்டும். 

 

நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறதா திமுக அரசு?

 

இந்த சூழலில், "ஆக... குற்றவாளிகள் கைது, குற்றப் பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம்" என்று பெருமை பேசுகிறார் பொம்மை முதல்வர். 

 

திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே- அதற்கு முன்னால், உங்கள் காவல்துறை 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.

 

ஏனென்றால், In case you've forgotten, காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது (ஏட்டளவில்)” என்று விமர்சித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமிரா.. ஓசூர் டாடா நிறுவனத்தில் பெரும் பதட்டம்..!