ஒசூரில் உள்ள டாடா நிறுவன பெண் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, நவம்பர் 4 மாலை முதல் ஆயிரக்கணக்கான இளம்பெண் தொழிலாளர்கள் விடுதி முன்பு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமாதானப்படுத்த முயன்றும், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
நீலா குமாரி என்ற வடமாநிலப் பெண் தொழிலாளி ரகசிய கேமரா வைத்ததாக போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் காணொளியை ஆண் நண்பருக்கு அனுப்பியது சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக, குற்றவாளியை கைது செய்ய வேண்டும், வார்டன்களை மாற்ற வேண்டும், மற்றும் விடுதி முழுவதும் தீவிர சோதனை செய்ய வேண்டும் என்பவை இருந்தன. போராட்டத்தை அடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்த பின், அதிகாலை 5 மணியளவில் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
பெற்றோர்கள் சம்பவ இடத்துக்கு வருவதால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.