இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி' (SIR) தொடக்கத்திலேயே தோல்வி அடைந்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், இந்த நடைமுறை "சர்வாதிகார போக்குடன் நடைமுறைக்கு உதவாத வகையில்" இருப்பதாக குற்றம் சாட்டினார்.
சென்னை, கோவை போன்ற தொழில் நகரங்களில் வாக்காளர்கள் காலை 10 மணிக்கு வீடுகளில் இல்லாததால், வாக்குச்சாவடி அலுவலர்கள் படிவங்களை வழங்க முடியாமல் திரும்புகின்றனர்.
2002/2005 பட்டியலின் பழைய தரவுகள் மற்றும் 2024 பட்டியல் முடக்கப்பட்டதால், அலுவலர்களால் களப்பணியை சரியாக செய்ய முடியவில்லை.
இத்தகைய காரணங்களால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட வாய்ப்புள்ளதால், இந்த திருத்த பணியை நிறுத்திவிட்டு, 2024 பட்டியலை அடிப்படையாக கொண்டு சுருக்கமுறை திருத்தம் செய்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.