அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "நான் 53 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறேன்; என்னைத் தனிப்பட்ட முறையில் யாரும் கட்டுப்படுத்தவோ அல்லது இயக்கவோ முடியாது" என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அவர் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசுகையில், "பொறுத்திருந்து பாருங்கள், நல்லதே நடக்கும்" என்று கூறினார்.
அதிமுகவில் நிலவும் "குடும்ப ஆதிக்கம்" குறித்து பேசிய அவர், "அதிமுக குடும்ப கட்சியாக இயங்குவது உங்களுக்கே தெரியும். ஈபிஎஸ்-இன் மகன், மைத்துனர் போன்றவர்களின் செயல்பாடுகள் மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கின்றன" என்று சுட்டி காட்டினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உண்மையானது அல்ல என்று தேர்தல் ஆணையத்தில் கொடுத்த 258 பக்க புகார் குறித்த விவரங்களை இப்போது வெளியிட முடியாது என்றும், பொறுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கட்சியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து, அந்த கேள்வியை நீக்கியவரிடம்தான் கேட்க வேண்டும் என்று பதிலளித்தார். தமக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் குறித்து வெளிப்படுத்தினால், அவர்களுக்கும் சிக்கல் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.