தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில், அமைச்சரின் மகனும் பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ. செந்தில்குமார் தங்கியுள்ள அறை மற்றும் திண்டுக்கல் மாவட்டம் துரைராஜ் நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திராவின் வீடு, திண்டுக்கல் மாவட்டம் சிலுவப்பாடியில் உள்ள இ.பெ. செந்தில்குமாரின் வீடு ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனைகள் சுமார் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சோதனைகள் நடைபெறும் இடங்களில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஆதரவாளர்கள் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கெனவே பணமோசடி வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ள நிலையில், இந்த சோதனை தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.