விசுவுக்கு பின் தமிழ் சினிமாவில் குடும்பபங்கான திரைப்படங்களை இயக்கியவர் வி.சேகர். இவரின் பிரச்சனைகள் குடும்ப பிரச்சினைகளை அலசியதோடு அதற்கு தீர்வையும் சொல்லியது. குறிப்பாக குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே உள்ள உறவு எவ்வளவு முக்கியமானது என்பதை தனது திரைப்படங்களில் பேசினார் வி.சேகர்.
கருத்தை சீரியசாக சொல்லாமல் காமெடி கலந்து சொன்னதால்தான் இவரின் படங்கள் மக்களிடையே அதிகம் ரீச் ஆனது. இவரின் படங்களில் கவுண்டமணி, விவேக், வடிவேலு, கோவை சரளா, வெண்ணிறாடை மூர்த்தி போன்ற பல காமெடி நடிகர்களும் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். எனவே வயிறு குலுங்க வைக்கும் காமெடி காட்சிகள் இவரின் படங்களில் இடம்பெற்றிருந்தது.
இவரின் திரைப்படங்களில் நடத்திதான் வடிவேலு ரசிகர்களிடம் பிரபலமானார். வடிவேலுவை வளர்த்து விட்டதே நான்தான் என பல பேட்டிகளிலும் சொல்லியிருக்கிறார்.
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும், விரலுக்கு ஏத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா, நான் புடிச்ச மாப்பிள்ளை, நம்ம வீட்டு கல்யாணம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உள்ளிட்ட பல திரைப்படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில்தான் தற்போது அவர் மரணமடைந்திருக்கிறார். இவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.