சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமிசுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
நவம்பர் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த உற்சவத்தில், நேற்று காலை 8 மணியளவில், அம்மன் ஸ்ரீசிவகாமிசுந்தரி அம்பாள் புதிய தேரில் எழுந்தருளினார். சுமார் 21 அடி உயரம் கொண்ட இந்த புதிய தேர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்களின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டது.
வெள்ளோட்டத்துக்கு பிறகு, புதிய தேரில் அம்மன் நான்கு வீதிகளிலும் பவனி வந்தார். திரளான பக்தர்கள் வடம் பிடித்துத் தேர் இழுத்து அம்மனை வழிபட்டனர்.
தேரோட்டத்தை தொடர்ந்து, இன்று பட்டு வாங்கும் உற்சவம் நடந்தது. நாளை தபசு உற்சவம் மற்றும் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.