தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கையில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இன்று வலுவடைந்துள்ளது. இது அடுத்த 60 மணி நேரத்தில் புயலாக வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயலாக வலுப்பெறும் பட்சத்தில், ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள 'DITWAH' என்ற பெயர் சூட்டப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த மூன்று மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், சில சமயம் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.