மலாக்கா ஜலசந்தியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. முதலில் மலாக்கா ஜலசந்தி பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலைக்குள் புயலாக மாற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், வங்கக்கடலில் இலங்கையை ஒட்டி நிலவி வரும் மற்றுமொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் இன்று வலுப்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஒட்டிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகருவதால், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.