வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று காலை 'டிக்வா' புயலாக மாறியுள்ளது. இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, நாளை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால், இங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
நவம்பர் 29 அன்று திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அதி கனமழை தொடர வாய்ப்புள்ளது. நவம்பர் 30 அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்கள் இன்று முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 80 கி.மீ வரை சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதால், கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.