சென்னை, துரைப்பாக்கத்தில் மூன்று மாத பெண் குழந்தை ரூ.2.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குழந்தையின் பெற்றோர் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கண்ணகி நகரை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் வினிஷா தம்பதி, ஏற்கனவே இரு குழந்தைகள் இருந்த நிலையில், நிதி ஆதாயத்திற்காக தங்களது மூன்றாவது குழந்தையை விற்க தீர்மானித்தனர். தரகர்கள் மூலம், திருவண்ணாமலையை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.2.20 லட்சத்துக்கு விற்கப்பட்டது.
மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் இராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கண்ணகி நகர்க் காவல்துறையினர் விசாரணை நடத்தி, குழந்தையின் பெற்றோர் மற்றும் நான்கு இடைத்தரகர்கள் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். பணம் பெற்றதற்காக குழந்தையை விற்றது விசாரணையில் உறுதியானது.
குழந்தை வாங்கிய தம்பதியினரிடம் இருந்து மீட்கப்பட்டு, தற்போது குழந்தைகள் நலத்துறையின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயலில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.