வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், தந்தையின் கைகளிலிருந்த நான்கு வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தல் சம்பவம் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	அம்மன் பேட்டையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் வேணு, தனது மகன் யோகேஷை பள்ளியில் இருந்து மதிய உணவிற்காக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டின் கேட் அருகே அவர்கள் நின்றுகொண்டிருந்தபோது, ஒரு கும்பல் காரில் வந்துள்ளது.
	 
	கர்நாடக பதிவு எண் கொண்ட அந்த காரில் வந்த நபர், தலையில் ஹெல்மெட் மற்றும் கையுறை அணிந்து கீழே இறங்கியுள்ளார். அவர் மெதுவாக வேணுவை அணுகி, ஒரு பொட்டலத்திலிருந்து மிளகாய்த்தூளை எடுத்து வேணுவின் முகத்தில் வீசிவிட்டு, யோகேஷை தூக்கி கொண்டு காரில் தப்பிச் செல்கிறார்.
	 
	வேணு தனது மகனை பிடித்துக்கொள்ள முயன்றபோதிலும், கடத்தல்காரர்கள் அவரை தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் காரில் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரில் போலியான பதிவு எண்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
	 
	குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்தத் துணிகரமான கடத்தல் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.