தமிழகத்திலிருந்து குழந்தைகளை கடத்தி செல்லும் வடநாட்டு கும்பல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல், தமிழகத்திலிருந்து ஒன்பது குழந்தைகளை கடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதில், குழந்தைகளை கடத்தியவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தரகர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இன்று அதிகாலை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்கிடமாக இருந்ததை போலீசார் கண்காணித்தனர். அப்போது, அவர்கள் தமிழகத்திலிருந்து குழந்தைகளை கடத்தி, கொத்தடிமைகளாக வேலைக்கு சேர்க்கும் கும்பல் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, உடனடியாக மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் சிக்கியிருந்த ஒன்பது சிறுவர்கள் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, உடனடி நடவடிக்கை எடுத்து சிறுவர்களை மீட்ட போலீசாருக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.