சென்னை விமான நிலையத்திற்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு, தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை ஏற்றுமதி செய்து பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெற்று வருவதாக சி.பி.ஐ.க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தின் கார்கோ பகுதி மற்றும் சுங்கத்துறை அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
உண்மையான தங்க நகைகளுக்கான ஆவணங்களை பயன்படுத்தி, போலியான தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் காரணமாகவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சி.பி.ஐ. சோதனையால், சென்னை விமான நிலையத்தின் கார்கோ பகுதி மற்றும் சுங்கத்துறை அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அதேபோல், சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள ஒரு நகை வியாபாரியின் இல்லத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை, சர்வதேச அளவில் நடைபெற்ற ஒரு பெரிய மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.