நாமக்கல் மாவட்டத்தில் திருமணமான இரண்டாவது நாளே நகை, பணத்துடன் மணமகள் ஓட்டம் பிடித்த நிலையில், மணமகன் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் சிவசண்முகம். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர் திருமண புரோக்கர் மூலம் இரண்டாவது திருமணத்திற்கு பெண் பார்த்து கொண்டிருந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தீபா என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இரு வீட்டார் சம்மதத்துடன் இந்தத் திருமணம் நடந்த நிலையில், தீபாவுக்கு வரதட்சணையாக ஒரு லட்ச ரூபாயும், புரோக்கருக்கு ஒரு லட்ச ரூபாயும் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து, கோவிலில் திருமணம் நடந்தது. திருமணம் ஆன இரண்டாவது நாளே தனது அக்கா வீட்டுக்கு மனைவி தீபாவை சிவசண்முகம் விருந்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கேயே இரவு தங்கிய நிலையில், மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தீபாவை காணவில்லை. மேலும், நகை, பணத்தையும் காணவில்லை. செல்போனை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, தீபா ஓடிப் போய்விட்டாள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிவசண்முகம், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.