"இரவு சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருகிறேன், உணவு தயார் செய்து வையுங்கள்" என்று அம்மாவுக்கு போன் செய்து கூறிய 32 வயது டாக்டர் ஒருவர் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஓம்கார் கவிட்கே என்பவர் ஜூலை 7ஆம் தேதி அன்று தனது காரில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவர் தனது தாய்க்கு செல்போன் மூலம் பேசியபோது, "இரவு உணவுக்காக வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன், உணவு தயார் செய்து வையுங்கள்" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், சுமார் இரவு 10 மணி அளவில் மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து கீழே குதித்து விட்டார். இது குறித்த தகவல் காவல்துறைக்கு தெரிந்தபோது, உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து காரையும், காரில் இருந்த ஐபோனையும் மீட்டனர். கார் எண் மற்றும் ஐபோனில் உள்ள விவரங்களை கொண்டு அது டாக்டர் கவிட்கேவுடையது என்பதை கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து, கடலோர காவல் படை மற்றும் தீயணைப்புப் படையினர் அவரது உடலை தேடி வரும் நிலையில், இரண்டு நாட்களாக அவரது உடல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், தொடர்ந்து மீட்புப் படையினர் டாக்டரின் உடலை தேடி வருகின்றனர்.
"இரவு உணவுக்கு சாப்பிட வருகிறேன்" என்று அம்மாவுக்கு போன் செய்துவிட்டு திடீரென அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.