கவுஹாத்தியில் லிவிங்-இன் உறவில் இருந்த ஒரு ஜோடியில், காதலன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில், காதலி கையில் உள்ள மணிக்கட்டை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவுஹாத்தியில் லிவிங் உறவில் இருந்தஒரு ஜோடி வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென மீண்டும் இருவருக்கும் சண்டை வந்த நிலையில், காதலன் காதலியை ஒரு அறையில் பூட்டிவிட்டு, இன்னொரு அறைக்கு சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலி, தன்னுடைய அறையில் தனது மணிக்கட்டை பிளேடால் அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, தூக்கில் தொங்கி இருந்த காதலனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரத்த வெள்ளத்தில் கிடந்த காதலியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
காதலனின் பெயர் நவஜோதி என்றும், காதலியின் பெயர் சுஷ்மிதா என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், சுஷ்மிதா கண் விழித்தவுடன் தான் அவரிடம் நடந்தது என்ன என்பது குறித்து விசாரணை செய்ய முடியும் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.