கடந்த சில மாதங்களாகப் பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றங்கள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக செயல்பட்ட போலீசார், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், வெடிகுண்டு தொடர்பான எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, இது ஒரு புரளி என்பது உறுதியானது. இந்த சம்பவம் தொடர்பாக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து ராயப்பேட்டை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.