சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் இடையிலான புதிய மெட்ரோ ரயில் சேவை வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இரண்டு வழித்தடங்களில் இயங்கிவரும் சென்னை மெட்ரோ ரயில் சேவை, இரண்டாம் கட்டத்தில் மேலும் மூன்று புதிய வழித்தடங்களுடன்விரிவாக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் மாதவரம் பால்பண்ணையில் தொடங்கி, கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை சுமார் 47 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ஐந்து சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும், 39 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
மெட்ரோ ரயில் அதிகாரிகள் அளித்துள்ள தகவல்களின்படி, இந்த வழித்தடத்தில் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பூவிருந்தவல்லி - போரூர் ஆளில்லா முதல் மெட்ரோ ரயில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், போரூர் - கோடம்பாக்கம் மற்றும் கோயம்பேடு - நந்தம்பாக்கம் வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை ஜூன் 2026 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.