பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்தியா கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு எழுதிய கடிதங்களுக்கு பதில் வராததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிகார் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓவைசி இந்தியா கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக, ஆர்ஜேடி கட்சிக்கு பல முறை கடிதம் எழுதியதாகவும், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிகாரில் போட்டியிட வெறும் ஆறு தொகுதிகளையும், அமைச்சர் பதவி தேவையில்லை என்றும் கேட்டதாக ஓவைசி கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று ஓவைசி பிகாரில் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இது, அவரது கட்சி தனித்து போட்டியிடுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
கடந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், ஓவைசியின் கட்சி தனித்து போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் தனித்து களம் காணும் அவரது முடிவும், அது பிகார் அரசியலில் ஏற்படுத்தும் தாக்கமும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.