மும்பையைச் சேர்ந்த 72 வயதான பாரத் ஹரக்கந்த் ஷா என்பவர், 'குளோப் கேபிடல் மார்க்கெட் லிமிடெட்' என்ற பங்கு தரகு நிறுவனம், தனது மனைவியின் கணக்கை பயன்படுத்தி 4 ஆண்டுகளில் ₹35 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். பங்குச்சந்தை பற்றி அறியாத ஷா, 2020 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் கணக்கு தொடங்கி, பரம்பரை சொத்துகளை இழந்துள்ளார்.
நிறுவனத்தின் ஊழியர்கள், ஷாவுக்கு லாபம் காட்டுமாறு போலியான அறிக்கைகளை அனுப்பி, அவரது கணக்கின் முழு கட்டுப்பாட்டையும் ரகசியமாக எடுத்துக்கொண்டனர். அவர்கள் அங்கீகரிக்கப்படாத, சுழற்சி வர்த்தகங்களை நடத்தி இழப்பை ஏற்படுத்தினர்.
ஜூலை 2024-ல், ரூ.35 கோடி கடன் இருப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் திடீரென அறிவித்தபோதுதான் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. தனது எஞ்சிய சொத்துக்களை விற்று அந்தக் கடனை ஷா அடைத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தரகு நிறுவனம், NSE-யிடமிருந்து வந்த நோட்டீஸ்களுக்கு ஷாவுக்கு தெரியாமல் பதிலளித்துள்ளது தெரியவந்துள்ளது. இது ஒரு திட்டமிட்ட நிதி மோசடி எனக் கூறி, ஷா அளித்த புகாரின் பேரில், வழக்கு மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.