Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

Advertiesment
anbumani

Mahendran

, சனி, 22 நவம்பர் 2025 (14:12 IST)
சேலத்தில்  திமுக நிர்வாகி சுட்டுக்கொலையில் இருந்து திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு  சான்று என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 
 
சேலம் மாவட்டம்  கருமந்துறையை  அடுத்த  கிராங்காடு கிராமத்தை சேர்ந்த  திமுக கிளைச் செயலாளர்  இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரைம் இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இராஜேந்திரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்களான இராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே  அவர்கள்  இராஜேந்திரனை சுட்டுக் கொலை செய்திருக்கக் கூடும்  என்றும் கூறப்படுகிறது. நிலத்தகராறுக்கு கூட ஆளும்கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை மோசமடைந்திருப்பதை பார்க்கும் போது தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தான் பாதுகாப்பு? என்ற வினா தான் எழுகிறது.
 
திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு மட்டும் தான் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.  சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி பா.ம.க. நிர்வாகிகளை  ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில்  காவல்துறையினர் கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியை பழிவாங்கத்  துடிப்பதில் காட்டும் அக்கறையையும்,  செலவிடும் நேரத்தையும் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை செலவிட்டிருந்தால்  இத்தகைய படுகொலைகளை தடுத்திருக்க முடியும். ஆனால்,  திமுக காவல்துறை அதற்கு தயாராக இல்லை.
 
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து  துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன். அந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் தான் சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்காக ஆட்சியாளர்கள்  வெட்கித் தலைகுனிய வேண்டும்.
 
கடந்த சில வாரங்களுக்கு முன் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், வழக்கறிஞருமான சு.சக்கரவர்த்தியை அதே பகுதியைச் சேர்ந்த சமூகவிரோதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தடையின்றி கிடைப்பது தான் அதற்கு காரணம் ஆகும்.
 
தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைப்பதாகவும், ரூ.5000 விலைக்குக் கூட துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆனாலும், துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. மக்களைப் பாதுகாக்கத் தவறிய திமுக  தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது. தங்களைக் காக்கத் தவறிய திமுகவுக்கு வரும் தேர்தலில் சரியான தண்டனையை தமிழ்நாட்டு மக்கள் அளிப்பார்கள்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!