புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி, அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக 'ஏர்போர்ட்' மூர்த்தி, வி.சி.க. தலைவர் திருமாவளவனை விமர்சித்து வந்தார். இந்நிலையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே, வி.சி.க.வினர் அவரை தாக்கியுள்ளனர். அதற்கு பதிலடியாக ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து, வி.சி.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஏற்கனவே சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையர் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.