உத்தர பிரதேச மாநிலத்தில் 35 வயதுடைய அனுராதா என்பவர், திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், அருகில் உள்ள ஒரு மாந்திரீகவாதியிடம் செல்லுமாறு ஒருவர் பரிந்துரை செய்ததின் பேரில், அனுராதாவின் தாயும், மாமியாரும் அவரை மாந்திரீகவாதியிடம் அழைத்துச் சென்றனர்.
மாந்திரீகவாதி, அனுராதாவின் மலட்டுத்தன்மைக்கு காரணம் அவரது உள்ளே இருக்கும் பேய் தான் என்று கூறியுள்ளார். அந்தப் பேயை விரட்டுவதற்கு ரூ.1 லட்சம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனை அடுத்து, பணம் பெற்றவுடன் பேயை விரட்டுவதற்காக அனுராதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து, வலுக்கட்டாயமாக கழிப்பறை நீரை குடிக்க வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, "பெரிய பேய் இருக்கிறது, அவ்வளவு எளிதில் போகாது" என்று கூறி, உருட்டுக்கட்டையால் கடுமையாக அடித்துள்ளார்.
இந்தக் கொடூர தாக்குதலால் அனுராதாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவரை தாயும், மாமியாரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அனுராதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, மாந்திரீகவாதி, அவரது மனைவி மற்றும் அவரது உதவியாளர்கள் தலைமறைவாகிவிட்டனர். தற்போது, மாந்திரீகவாதி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள மூன்று நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.