கால் டாக்ஸி டிரைவர்களை மட்டும் குறிவைத்து கொலை செய்து, அவர்களுடைய காரை திருடி, அதை விற்று பணம் சம்பாதித்த ஒரு தொடர் கொலைகாரன் 24 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அஜய் லம்பா என்ற இந்த கொலைகாரன், கால் டாக்ஸி டிரைவர்களை மட்டும் குறி வைத்து கொலை செய்து, அவர்களின் வாகனங்களை திருடி விற்று வந்ததாக டெல்லியில் சில வழக்குகள் பதிவாகின. இதில், லம்பா மற்றும் அவனுடைய கூட்டாளிகள் கால் டாக்ஸியில் செல்வது போல் சென்று, ஓட்டுநருக்கு மயக்க மருந்து கொடுத்து, பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிடுவர். பிறகு, அந்த கால் டாக்ஸியை கடத்தி நேபாளத்தில் கொண்டு சென்று விற்று வந்துள்ளனர்.
2001 ஆம் ஆண்டு முதல் இந்தத் தொடர் கால் டாக்ஸி கொள்ளைகள் நடந்து வந்த நிலையில், லம்பா மற்றும் அவனுடைய கும்பலை பிடிக்க போலீசார் பல வழிகளில் முயற்சி செய்தனர். தற்போது லம்பா மற்றும் அவனது கூட்டாளிகள் பிடிபட்டுள்ள நிலையில், அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அந்த கும்பலிடம் இருந்து சட்டவிரோதமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த 24 ஆண்டுகளாகப் பல கால் டாக்ஸி டிரைவர்களை கொலை செய்த இந்தக்கும்பலிடம் விசாரணை செய்தால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.