பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தொழிலதிபர் கோபால் கேம்கா கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது இறுதிச்சடங்கில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர் ரோஷன் குமார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோபால் கேம்கா கொலையில் ரோஷன் குமாருக்கு பங்கு உள்ளதா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
சம்பந்தமே இல்லாமல் இறுதிச்சடங்கில் ரோஷன் குமார் ஏன் கலந்துகொண்டார், இவர்தான் கொலையாளியா அல்லது கொலையாளிகளுக்கு நெருக்கமானவரா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே இந்த கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ரோஷன் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தொழிலதிபர் கோபால் கேம்கா கடந்த ஜூலை 4-ஆம் தேதி இரவு தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இந்த கொலையில் ஒரு பெரிய கும்பலே சம்பந்தப்பட்டிருந்தது என்றும், கேம்காவின் நடமாட்டத்தை கண்காணிக்க ஒருவரும், கொலை செய்ய ஒருவரும், கொலைக்கு பின் எப்படி தப்புவது என்பது குறித்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.