மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார், தனிப்படை போலீசாரால் சமீபத்த்ல் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மாற்ற கோரியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதலில் ஜூலை 3ஆம் தேதி இந்த போராட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், அன்றைய தினம் அந்த இடம் வேறு காரணத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளதாக கூறி காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதன் காரணமாக, போராட்டம் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, த.வெ.க.வினர் இந்த போராட்டத்திற்கு மீண்டும் காவல்துறையினரிடம் அனுமதி கோரினர். ஆனால், இரண்டாவது முறையாகவும் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னையில் போராட்டம் நடத்த காவல்துறைக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி த.வெ.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையிடப்பட்டபோது, நீதிபதி வேல்முருகன் மறுத்துவிட்டார்.
இந்த சூழலில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து, காவல்துறையும் த.வெ.க.வினரின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை சிவானந்தா சாலையில் இந்த போராட்டத்தை நடத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.