Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

Advertiesment
Anbumani vs Stalin'

Prasanth K

, திங்கள், 7 ஜூலை 2025 (11:27 IST)

தமிழ்நாடு அரசு துறை மாணவர் நல விடுதிகளை மொத்தமாக சமூகநீதி விடுதிகள் என பெயரிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு குறித்து பாமக செயல் தலைவர் அன்புமணி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஆவேசமாக பதிவிட்டுள்ள அன்புமணி “சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின் - என்னவொரு முரண்?

 

தமிழ்நாட்டில்  பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 2,739  விடுதிகளும்  இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூக நீதி என்ற பெயரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான  திமுக அரசு பயன்படுத்துவதை விட  பெரிய கொடுமையும்,  முரண்பாடும் இருக்க முடியாது.

 

வாழும் காலத்தில் ஒருவரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டு, அவரது கல்லறையில்  பெயரை பொறிப்பது எப்படியோ, அப்படித்தான் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சமூகநீதியை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி  என்று கூறிக் கொண்டிருக்கிறார். சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதிக் காட்டினால் அது இனிக்காது என்ற அடிப்படைக் கூட  அவருக்கு தெரியவில்லை.

 

திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் சமூகநீதியைக் காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.  இந்தியாவில் கர்நாடகம், பிகார், தெலுங்கானம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்ட நிலையில், இன்று வரை தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில்,  தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அந்த சமூகநீதிக் கடமையை  தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

 

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1193 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.  அதேபோல் சமூகநீதி கோரும் பிற சமூகங்களுக்கும் துரோகத்தை மட்டுமே பரிசாக அளித்து வருகிறது  திமுக அரசு.

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே... உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.......

 

சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல்..... அதை நீங்களும், உங்களைப் போன்றவர்களும் உச்சரித்து கொச்சைப்படுத்தாமல் இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!