மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெரும் தனி நபர்களுக்கு வருமான வரி இல்லை என்று அறிவித்துள்ளார். இதனால் நடுத்தர வர்க்கத்து மக்கள் மிகப்பெரிய அளவில் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், இந்த சலுகை யார் யாருக்கு பொருந்தும், யார் யாருக்கு பொருந்தாது என்பது குறித்த சில தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்யும் ஊழியர்கள் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கினாலும், அவர்களுக்கு வருமான வரி கிடையாது.
அதேபோல், சொந்த தொழில் செய்து அந்த தொழில் மூலம் 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெற்றாலும், அவர்களுக்கும் வருமான வரி கிடையாது. ஆனால் அதே நேரத்தில், பணத்தை வைத்து பணம் வருமானம் செய்பவருக்கு இந்த சலுகை கிடையாது.
அதாவது, பங்குச்சந்தை பத்திரம், ரியல் எஸ்டேட் போன்ற ஒரு சொத்து விற்பதன் மூலம் வருமானம் கிடைத்தால், அவர்கள் வருமான வரி கட்ட வேண்டும். அதேபோல், மியூச்சுவல் ஃபண்ட், பங்குகள் வாங்கி விற்று லாபம் செய்வது, வீடு வாங்கி விற்று லாபம் பெறுவது, பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்து வருமானம் பெற்றால், அவர்களுக்கு இந்த வருமான வரி சலுகை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.